அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீடித்த போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீரிணையின் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணையை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளிடமிருந்து ஈரான் இராணுவம் பாதுகாத்துள்ளதாக ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா மொஜ்தபா காமேனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் இராணுவத்தின் நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், எதிரிப் படைகளை ஹார்முஸ் பகுதியில் இருந்து பின்வாங்கச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுடனான சமரசப் பேச்சுவார்த்தையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொதுவெளியில் நிராகரித்திருந்தாலும், புதிய நிபந்தனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தையைத் தொடரத் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தார் உள்ளிட்ட சர்வதேச மத்தியஸ்த நாடுகள் மீண்டும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதார பாதிப்புகள் மற்றும் சர்வதேச எரிபொருள் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உடன்பாட்டை ஏற்படுத்துவதற்கான புதிய வரைவுத் திட்டங்களை மத்தியஸ்தர்கள் முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு தரப்பினருக்கும் இடையே விரைவில் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
