HomeTop newsசமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது - பாராளுமன்றக் குழு வலியுறுத்தல்

சமையல் எரிவாயு விலை அதிகரிப்பால் நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது – பாராளுமன்றக் குழு வலியுறுத்தல்

வீட்டுப் பாவனை சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பினால் நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு பாராளுமன்றத் துறைசார் மேற்பார்வைக் குழு வலியுறுத்தியுள்ளது.

சுற்றாடல், விவசாயம் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கடந்த 18ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வீட்டுப் பாவனை எரிவாயுவை விநியோகிக்கும் தனியார் நிறுவனம் ஒன்று, எரிவாயு சிலிண்டரின் விலையை கணிசமான அளவு அதிகரித்துள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் நுகர்வோர் விவகார அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர், வீட்டுப் பாவனை எரிவாயுவின் விலையைத் தீர்மானிக்கும் அதிகாரம் தமது அதிகார சபைக்கு இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

எனினும், விலை அதிகரிப்பினால் நுகர்வோர் எதிர்நோக்கும் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துடன் கலந்துரையாடி விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தனியார் நிறுவனத்தின் சந்தைப் பங்கு குறைவாக இருப்பதால், அதிக விலைக்கு எரிவாயுவைக் கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும், அதற்கமைய கொள்வனவுச் செலவுகளுக்கு ஏற்ப சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் விளக்கமளித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் குழுவிடம் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் வீட்டுப் பாவனை எரிவாயு விநியோகத்தில் எவ்வித தடைகளும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், விலை அதிகரிப்புகளால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் துறைசார் மேற்பார்வைக் குழு வலியுறுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular