இலங்கையின் இளைஞர் தலைமுறையினர் எதிர்நோக்கும் சவால்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்கும் வகையில் தயாரிக்கப்படும் புதிய தேசிய இளைஞர் கொள்கை, 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்குள் நிறைவு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாகவும் நிலைபேறான முறையிலும் அணுகுவதற்கான வழிகாட்டல்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்கக்கூடிய ஒருங்கிணைந்த கொள்கைச் சட்டகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டெம்பர் 16ஆம் திகதி இரத்மலானையில் நடைபெற்ற “இளைஞர் அபிவிருத்தி தொடர்பான முதலாவது தேசிய ஆராய்ச்சி மாநாடு 2026” நிகழ்வில் உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாடு, “சுய வலிமைகளை அடிப்படையாகக் கொண்டு சமூக மாற்றத்தின் முன்னோடிகளாக, உரிமைகளைத் தாங்கிய இளைஞர்கள்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது.
இளைஞர் வலுவூட்டல் மற்றும் தலைமைத்துவம், கல்வி மற்றும் திறன் விருத்தி, சுகாதாரம் மற்றும் உளநலம், தொழில்முயற்சியாண்மை மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம், காலநிலை மாற்றம், சமூக ஒருங்கிணைவு, இளைஞர் புலம்பெயர்வு மற்றும் சர்வதேச உறவுகள், கலை மற்றும் கலாசாரம் உள்ளிட்ட 9 முக்கிய துறைகளை அடிப்படையாகக் கொண்டு மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
2014ஆம் ஆண்டு தேசிய இளைஞர் கொள்கைக்கான வரைவு தயாரிக்கப்பட்ட போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிவித்த பிரதமர், தற்போதைய தொழில்நுட்பம், பொருளாதாரம் மற்றும் தொழில் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப, அனைத்துத் தரப்பினரின் பங்கேற்புடன் புதிய கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
அரசாங்கத்தின் பொது முதலீட்டுத் திட்டத்தின் கீழ் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 145 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இம்மாநாட்டுக்காக 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் டிஜிட்டல்மயமாக்கலுக்கு மத்தியில் இளைஞர்களுக்கு கல்விசார் அறிவு மாத்திரம் போதுமானதல்ல எனக் குறிப்பிட்ட அவர், நடைமுறை, தொழில்நுட்ப மற்றும் தொழில்சார் திறன்களையும் அவர்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
மேலும், இளைஞர் அபிவிருத்தி என்பது அனைத்து துறைகளுடனும் தொடர்புடைய விடயம் எனத் தெரிவித்த பிரதமர், புதிய தேசிய இளைஞர் கொள்கையின் வெற்றி அதன் நடைமுறைப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டிலேயே தங்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்த ஆராய்ச்சி மாநாட்டை அடுத்த வருடம் சர்வதேச மாநாடாக நடத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இலங்கை ஆராய்ச்சியாளர்கள் பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் பி.எம்.சி. திலகரத்ன உள்ளிட்ட அரச அதிகாரிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
