HomeTop newsசிறைச்சாலை அதிகாரிகளின் சம்பள உயர்வு குறித்து முக்கிய தீர்மானம்

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பள உயர்வு குறித்து முக்கிய தீர்மானம்

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தும்புர போகம்பறை சிறைச்சாலை மற்றும் பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையை அடிப்படையாகக் கொண்டு கூட்டு பொறிமுறையொன்றை நிறுவிய பின்னர், தும்புர சிறைச்சாலை அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

சிறைச்சாலை அதிகாரிகளின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கைகள் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஊடாக கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அதிகாரிகள் ஆற்றிவரும் சிறந்த சேவைக்காக அவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

“வரவிருக்கும் வரவு செலவுத் திட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு வழங்குவது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சிறைச்சாலைத் திணைக்களத்தில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிடங்கள் நிலவுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சிறைச்சாலை அதிகாரிகளின் சேவையை பணத்தினால் மதிப்பிட முடியாது என்றும் வலியுறுத்தினார்.

சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதால் மூன்று மாதங்களுக்கும் மேலாக விளக்கமறியலில் இருக்க வேண்டிய நிலைமையைத் தடுப்பதற்கான திட்டமொன்று அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்குள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் புனர்வாழ்வு அணுகுமுறை பின்பற்றப்பட்ட போதிலும், போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எந்தவொரு நிவாரணமும் வழங்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்த நம்மால் முடியும். ஆனால் தேவையை நிறுத்த வேண்டுமானால் சமூகத்தின் ஆதரவு அவசியம்” என அமைச்சர் கூறினார்.

பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

சிறைச்சாலைச் சேவை ஒரு கௌரவமான தொழில் என்பதால், அதன் கண்ணியத்தைப் பாதுகாத்து செயற்படுவது சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். ஏதேனும் ஒரு ஆதாயத்திற்காக மற்றொரு மனிதனின் உயிரை அழிக்கக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வழக்கு விசாரணைகளுக்காக கைதிகளை அழைத்துச் செல்லும்போது அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கைதிகள் மற்றும் அதிகாரிகளின் நலன்புரிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சிறைச்சாலையின் நிலைமை குறித்தும் அவதானிப்பில் ஈடுபட்ட அமைச்சர், அங்கு கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுடன் கலந்துரையாடினார்.

சிறைச்சாலைகளுக்குள் மோதல் நிலைமை ஏற்பட்டால் உடனடியாகச் செயற்படுதல் மற்றும் கைதிகளின் நலன்புரி நடவடிக்கைகளை முறைமைப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் அனைத்துச் சிறைச்சாலைகளையும் அடிப்படையாகக் கொண்டு கூட்டுப் பொறிமுறைகளை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular