HomeTop newsஇஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

இஸ்ரேல் நாடாளுமன்றம் கலைப்பு

இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் தொடர்ந்து பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேல் நாடாளுமன்றம் நேற்று  கலைக்கப்பட்டது.

இஸ்ரேல் நாடளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 27 அன்று நடைபெறவுள்ளதைத் தொடர்ந்து, நெசெட் என அழைக்கப்படும் இஸ்ரேல் நாடாளுமன்ற சபை நேற்றுடன்  கலைக்கப்பட்டது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ஒக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து, 3 ஆண்டுகளாக காஸா மீது இஸ்ரேல் போர் தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், அடுத்தத் தேர்தலுக்கு முன்பு பதவியைத் தக்கவைக்க நெதன்யாகு போராடி வந்தார். இந்தச் சூழலில் நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் நஃப்தாலி பென்னட் மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி போன்ற எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அடுத்த பிரதமராக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்தே, கடந்த ஒரு வார காலத்தில் நெதன்யாகு தனது விருப்பத்திற்குரிய சர்ச்சையான பல மசோதாக்களை நீண்ட நேர நாடாளுமன்ற அமர்வுகள் மூலம் அவசரமாக நிறைவேற்றியுள்ளார்.

தீவிர மதப்பற்றுள்ள கட்சிகள் தனது கூட்டணியில் இணைவதை உறுதிசெய்ய, அந்தப் பிரிவுகளைச் சேர்ந்த ஆண்கள் இராணுவத்தில் இணைவதை நிறுத்தும் நடைமுறையிலான 2 மசோதாக்களை நெதன்யாகு தலைமையிலான ஆட்சி இவ்வாரத் தொடக்கத்தில் நிறைவேற்றியது.

ஊடகங்கள் மீது அரசின் கட்டுப்பாட்டை அதிகரிப்பது, தலைமை சட்ட அதிகாரி (அட்டர்னி ஜெனரல்) பொறுப்பை பலவீனப்படுத்துவது போன்ற நீதித்துறைக்கு எதிரான பல மசோதாக்களை இஸ்ரேல் நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அட்டர்னி ஜெனரல் காலி பஹராவ் – மியாரா மீது நெதன்யாகு உள்ளிட்ட வலதுசாரிகள் பலரும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கும்போது அவைத்தலைவர் அமீர் ஓஹானா பேசுகையில், 4 ஆண்டுகால ஆட்சியை நாங்கள் நிறைவு செய்கிறோம். 9 பட்ஜெட்கள், நூற்றுக்கணக்கான மசோதாக்களை நிறைவேற்றியுள்ளோம். எங்கள் மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றி. அதன்மூலமே, 4 ஆண்டுகால ஆட்சியைத் தக்கவைப்பதில் வெற்றிபெற்றோம் என்றார்.

இஸ்ரேல் வரலாற்றில் ஒரு பிரதமர் 4 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்வது அரிய நிகழ்வாகும். இதுபோன்று, இஸ்ரேலில் கடைசியாக முழு பதவிக்காலம் நிறைவு செய்யப்பட்ட ஆண்டு 1988. இஸ்ரேலில் பதவிக்கால வரம்புகள் எதுவுமில்லை. இஸ்ரேல் வரலாற்றிலேயே அதிக முறை நெதன்யாகு மட்டுமே பதவியில் இருந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular