HomeTop newsமுன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்கு நாளை மறுதினம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்கு நாளை மறுதினம்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகளை பொலிஸ் உயரிய மரியாதைகளுடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற பொலிஸ் மா அதிபர் ஒருவர் காலமானால் வழங்கப்படும் பொலிஸ் உயரிய மரியாதைகளை முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவின் இறுதிச் சடங்குகள் பொலிஸ் மரியாதைகளுடன் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளன.

அவரது உடலம் தற்போது கொழும்பிலுள்ள தனியார் மலர்சாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராகப் பணியாற்றிய சி.டி. விக்கிரமரத்ன, நேற்று (17) காலை அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், அவர் தனது பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுட்டுக்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரது உடலம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளதுடன், முன்னாள் பொலிஸ் மா அதிபரின் உடலப் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரும் மாலபே பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், அவர் சுட்டுக்கொள்வதற்குப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் துப்பாக்கியும் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விசாரணைகளுக்கு அமைய, அவரது மனைவி மற்றும் மூன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular