தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக ஏழாவது இரவாகவும் அமெரிக்கா தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) தனது எக்ஸ் (X) தள பதிவில், அமெரிக்கப் படைகள் ஈரானின் கண்காணிப்பு தளங்கள், இராணுவ தளவாட கட்டமைப்புகள், நிலத்தடி ஆயுதக் கிடங்குகள் மற்றும் கடல்சார் திறன்களை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, குவைத் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் கூட்டணி நாடுகளை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டதாக உரிமை கோரியுள்ளது.
ஈரானின் தாக்குதல்களைத் தொடர்ந்து, தமது வான் பாதுகாப்புப் படையினர் “பகைமைமிக்க ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொண்டு முறியடித்ததாக” குவைத் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரே இரவில் தமது வான்பரப்புக்குள் ஏவப்பட்ட ஈரானின் 10 ஏவுகணைகளைத் தடுத்து அழித்ததாக ஜோர்தான் இராணுவமும் அறிவித்துள்ளது. இதனால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளில் போர் விமானங்கள், வான்வழி ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஏனைய இராணுவ உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதாக சர்வதேச ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
