தென்மேற்கு சீனாவில் நேற்று (17) ஏற்பட்ட நிலச்சரிவில் எட்டு பேர் உயிரிழந்தனர்.
மேலும் 34 பேர் காணாமல் போனதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். நிலச்சரிவை தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
உள்ளூர் நேரப்படி காலை 9:10 மணியளவில் (0110 GMT) சோங்கிங் நகரின் பெங்ஷுய் மாவட்டத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. சம்பவ இடத்தில் 800-க்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக அரசு ஊடகமான CCTV தெரிவித்துள்ளது.
சிக்கிக்கொண்ட 18 பேர் மீட்கப்பட்டதாக மாவட்ட தலைவர் ரென் சுஜியாங்செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். அவர்களில் எட்டு பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக பகுதி வீதி ஒன்றின் ஒரு பகுதியை பாறைகள் மற்றும் மண் குவியல்கள் மூடியிருப்பதை CCTV வெளியிட்ட காட்சிகள் காட்டின. நிலச்சரிவை தொடர்ந்து தூசி படலத்தில் இருந்து மக்கள் அச்சத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி “கணிக்க முடியாத” செங்குத்தான நிலப்பரப்பை கொண்டது என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும், மலைச்சரிவின் ஓரங்களில் ஆபத்தான பாறைகள் இன்னும் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவும் 50 மில்லியன் யுவான் (இந்திய மதிப்பில் ரூ. 71 கோடி) இயற்கை பேரிடர் நிவாரண நிதியை அரசு ஒதுக்கியுள்ளதாக நிதி அமைச்சகம் மற்றும் அவசரக்கால மேலாண்மை அமைச்சகம் தெரிவித்தன.
பேரிடருக்கான காரணத்தை விரைவாகக் கண்டறியுமாறும், “புவியியல் ரீதியான பேரிடர் அபாயங்கள் மற்றும் பிற சாத்தியமான ஆபத்துகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்குமாறும்” அதிகாரிகளை ஜனாதிபதி ஜி வலியுறுத்தியுள்ளார்.
