ரயில்வே திணைக்களத்துக்குச் சொந்தமான ரயில் இயந்திரங்கள் மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகளின் (Power Sets) எண்ணிக்கை குறைந்துள்ளதால், எதிர்காலத்தில் ரயில் சேவைகளில் கடுமையான நெருக்கடி ஏற்படக்கூடும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தற்போதைய ரயில் நேர அட்டவணைக்கு அமைய சேவைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல, நிலவும் பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் என சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்துள்ளார்.
அவரின் தகவலின்படி, 2023ஆம் ஆண்டில் 106 ஆக இருந்த மொத்த ரயில் இயந்திரங்களின் எண்ணிக்கை, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 98 ஆகக் குறைந்துள்ளதுடன், 8 இயந்திரங்கள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
2023ஆம் ஆண்டில் நடைமுறையில் இருந்த ரயில் நேர அட்டவணையின் கீழ் சுமார் 450 ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. அவற்றை முன்னெடுக்க 74 ரயில் இயந்திரங்கள் தேவைப்பட்ட போதிலும், அப்போது இயக்கத்துக்குத் தகுதியான நிலையில் 68 இயந்திரங்கள் மட்டுமே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தற்போது அந்த எண்ணிக்கையும் மேலும் குறைந்து 49 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2023ஆம் ஆண்டில் ரயில்வே திணைக்களத்திடம் 109 ரயில் இயந்திர வலு தொகுதிகள் இருந்த நிலையில், தற்போது அவற்றின் எண்ணிக்கை 106 ஆகக் குறைந்துள்ளது. இதில் 3 வலு தொகுதிகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
தற்போதைய சேவைகளை முழுமையாக முன்னெடுக்க 88 ரயில் இயந்திர வலு தொகுதிகள் தேவைப்படுகின்றன. எனினும், 2023ஆம் ஆண்டில் இயங்கு நிலையில் 78 வலு தொகுதிகள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 52 ஆகக் குறைந்துள்ளது. இதனால் 26 ரயில் இயந்திர வலு தொகுதிகளின் பற்றாக்குறை நிலவுவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 2023ஆம் ஆண்டில் 261 ஆக இருந்த ரயில் இயந்திரங்கள் மற்றும் ரயில் இயந்திர வலு தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை, 19 அலகுகள் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026ஆம் ஆண்டில் 242 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலை தொடருமானால் ரயில் சேவைகளை வழமைபோல் முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ள ரயில் நிலைய அதிபர்கள் சங்கம், தேவையான இயந்திரங்கள் மற்றும் வலு தொகுதிகளை விரைவாக சேவையில் இணைக்க அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
