உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் குழு ‘இ’ பிரிவு லீக் போட்டியில் ஜேர்மனி அணி, குராசோ அணியை 7-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி இலகுவான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
போட்டி தொடங்கிய ஆறாவது நிமிடத்திலேயே ஜேர்மனியின் பெலிக்ஸ் நிமிச் முதல் கோலைப் பதிவு செய்து அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார்.
எனினும், 21ஆவது நிமிடத்தில் குராசோ அணியின் லிவனோ கமெனிசியா பதில் கோல் அடித்ததன் மூலம் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையை எட்டியது.
இதன் பின்னர் ஆட்டத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் கைப்பற்றிய ஜேர்மனி அணி தொடர்ச்சியாக கோல்களை குவித்தது. நிகோ ஸ்கால்டர்பெக் 38ஆவது நிமிடத்திலும், ஹைய் ஹவெஸ்ட் 45ஆவது நிமிடத்திலும், ஜமல் முசியாலா 47ஆவது நிமிடத்திலும், நதனியல் பிரவுன் 68ஆவது நிமிடத்திலும், டென்னிஸ் உன்தாவ் 78ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.
மேலும், ஹைய் ஹவெஸ்ட் 88ஆவது நிமிடத்தில் தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்து ஜேர்மனியின் கோல் எண்ணிக்கையை ஏழாக உயர்த்தினார்.
மறுபுறம், குராசோ அணியின் கோல் முயற்சிகளை ஜேர்மனி பாதுகாப்பு வீரர்களும் கோல் காப்பாளரும் திறம்பட முறியடித்தனர்.
இதன் மூலம் 7-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜேர்மனி அணி, போட்டியில் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது.
