முன்மொழியப்பட்ட 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன முதலீடு என்ன ஆனது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முக்கிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வெளிவிவகாரம், சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கள் மீதான விவாதத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இதன்போது, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
சுற்றுலாத்துறைக்கான மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட 2,119 மில்லியன் ரூபாயில், கடந்த ஆண்டு 420 மில்லியன் ரூபாய் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாத்துறை வருமானத்தைக் கணக்கிடும் முறையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடலோரப் பகுதிகளில் இடிப்பு நடவடிக்கைகள் மற்றும் உரிமங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் காரணமாக சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வெளிநாடுகளில் காலியாக உள்ள இலங்கைத் தூதரகப் பதவிகள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புச் சந்தைகளைப் பெற்றுக்கொள்வதன் அவசியம் குறித்தும் நாமல் ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை மற்றும் சர்வதேச உறவுகள் நாட்டின் பொருளாதார நலன்களுக்குப் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் பொதுத்துறை ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகள் தொடர்பிலும் அரசாங்கத்தை அவர் விமர்சித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்கு எதிர்வரும் நவம்பர் 30ஆம் திகதிக்குள் தீர்வு வழங்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இறுதியாக, சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெறும் அறிவிப்புகளாக இல்லாமல், பொதுமக்களுக்கு நேரடியான மற்றும் நடைமுறைப் பலன்களை வழங்கும் வகையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
