HomeTop newsபண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு

பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் போக்குவரத்துச் சோதனைகள் மற்றும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

குறிப்பாக, போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிவதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் வாகனம் செலுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான சுற்றிவளைப்புகள் மேலும் தீவிரப்படுத்தப்படவுள்ளன.

இதற்குத் தேவையான மதுபோதையைப் பரிசோதிக்கும் உபகரணங்கள் போதியளவில் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சாரதிகளை எவ்வித முன்னறிவிப்புமின்றி எழுமாறாக போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதேபோன்று, வீதி விபத்துக்கள் இடம்பெற்ற பின்னர், சம்பந்தப்பட்ட சாரதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.

பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாகப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

எனவே, மதுபோதையிலோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்திய நிலையிலோ எவரும் வாகனம் செலுத்த வேண்டாம் எனவும், வீதி விதிமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் பயணிக்குமாறும் சாரதிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular