அரசின் e-passport (மின்னணு கடவுச்சீட்டு) கொள்முதல் டெண்டர் தொடர்பாக, வரி செலுத்துவோருக்கு அதிகமான நீண்டகால தொழில்நுட்பச் செலவுகள் ஏற்படக்கூடும் என சந்தேகங்கள் எழுந்துள்ளன.
பொது பாதுகாப்பு அமைச்சகம், 3.15 மில்லியன் e-passport களுக்கான முக்கிய டெண்டரை Thales DIS Finland Oy / Just in Time (JIT) நிறுவனத்திற்கு வழங்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த ஒப்பந்தம் அரசுக்கு அதிக செலவுடைய “நிதி வலை” (cost trap) ஆக மாறக்கூடும் என தற்போது கவலைகள் எழுந்துள்ளன.
ஒப்பந்தத்தின் படி, சம்பந்தப்பட்ட நிறுவனம் தேவையான தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை தனது செலவில் நிறுவி பராமரிக்கும். அதனைத் தொடர்ந்து, அரசு ஒவ்வொரு கடவுச்சீட்டுக்கும் சுமார் €1.04 (ரூ.302.23) செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும், மாதாந்திர குறைந்தபட்சமாக 60,000 கடவுச்சீட்டுகள் அடிப்படையில் பணம் செலுத்த வேண்டிய விதியும் ஒப்பந்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகள் அல்லது 3.15 மில்லியன் கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்ட பின்னர், உபகரணங்கள் குடிவரவு மற்றும் குடியகல்வு துறைக்கு ஒப்படைக்கப்பட உள்ளன.
ஆனால், அந்த இயந்திரங்கள் தொடர்புடைய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொந்த மென்பொருள் இல்லாமல் செயல்பட முடியாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
டெண்டர் செயல்முறையில் எதிர்கால மென்பொருள் உரிமம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்கு வரம்புகள் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பின்னர் அதிக கட்டணங்களை நிறுவனம் வசூலிக்கக்கூடும் அபாயம் உள்ளது.
மேலும் Oracle Corporation, Microsoft Windows மற்றும் ஆன்டிவைரஸ் சேவைகள் போன்றவற்றிற்கும் அரசு உரிமக் கட்டணங்களை செலுத்த வேண்டியிருக்கும்.
இந்த ஒப்பந்தத்தை கவனமாக மறுபரிசீலனை செய்து, வரி செலுத்துவோருக்கு எதிர்பாராத நீண்டகாலச் செலவுகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என நிபுணர்கள் அரசுக்கு வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
