இலங்கையில் சீனியின் விலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக புறக்கோட்டை மொத்த வியாபாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையின் உள்நாட்டு நுகர்வுக்குத் தேவையான மொத்த சீனியில் சுமார் 63 சதவீதம் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15ஆம் திகதி முதல் இந்தியா சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதால் உள்நாட்டில் விலை கணிசமாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் எல்-நினோ காலநிலை மாற்றம் காரணமாக, வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரை சீனி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இலங்கையின் மாதாந்திர சீனி நுகர்வு சுமார் 60,000 மெட்ரிக் தொன் ஆகும்.
உள்நாட்டில் பெலவத்த மற்றும் செவனகல சர்க்கரை ஆலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி, மொத்த தேவையில் சுமார் 10 சதவீதம் மட்டுமே பூர்த்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை பெரும்பாலான சீனியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதுடன், ஐக்கிய அரபு இராச்சியம், பிரேசில் மற்றும் போலந்து போன்ற நாடுகளிலிருந்தும் இறக்குமதி செய்கிறது.
இதற்கிடையில், மாற்றுச் சந்தைகள் மூலம் சீனியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், இந்தியா சுத்திகரிக்கப்பட்ட சீனி ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவில்லை என்பதால், அதனை இறக்குமதி செய்வதில் பெரிய சிக்கல் இல்லை எனவும், உள்நாட்டில் சுமார் 80,000 மெட்ரிக் தொன் சீனி கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரிப்பு காரணமாக சீனியின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
