ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்டு அவருடன் சிரித்துப் பேசிவிட்டு, பின்னர் வெளியே வந்து வரவு – செலவுத் திட்டத்தை விமர்சிக்கும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளின் செயற்பாடுகள் இரட்டை வேடத்தைக் காட்டுவதாக உலமா கவுன்சில் தலைவர் முபாறக் முப்தி தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை எனவும், இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில வரவேற்கத்தக்க அம்சங்கள் வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும், சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது.
எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு நேரடி நிவாரணம் வழங்குவதே சிறந்த வரவு – செலவுத் திட்டமாக அமையும்.
மேலும், விவசாயிகளுக்குப் போதிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், உரம் மற்றும் கிருமிநாசினிகளின் விலை அதிகரிப்பு, நெல்லுக்கான உரிய விலை கிடைக்காமை போன்ற காரணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இருந்த நான்கு வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் தீர்மானத்தை வரவேற்றுள்ள அவர், மாகாண சபைகள் அவசியமற்றவை என்பதே தமது நிலைப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், சமஷ்டித் தீர்வு உள்ளிட்ட விடயங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், நாட்டின் பொதுச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என வலியுறுத்திய அவர், மதத் தலைவர்கள் உட்பட எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பலமான எதிர்க்கட்சி இல்லாத சூழலில், இனவாத சக்திகள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு இடமளிக்கக் கூடாது எனவும், தற்போதைய ஆட்சி தொடர வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் முபாறக் முப்தி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
