Homeஉலகம்பெருவில் கடுமையான நிலநடுக்கம் – 27 பேர் காயம்

பெருவில் கடுமையான நிலநடுக்கம் – 27 பேர் காயம்

பெரு நாட்டின் தெற்கு பசிபிக் பகுதியில் இன்று ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், குறைந்தது 27 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆகப் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையம், பம்பா டி ததே நகரின் கிழக்கு-தென்கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 56.5 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐகா மாகாணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல கட்டிடங்கள் நிலநடுக்கத்தின் காரணமாக குலுங்கியுள்ளன. பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டதுடன், சான் லூயிஸ் கொன்ஜகா பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிர்வை உணர்ந்த மக்கள் வீடுகள் மற்றும் கட்டிடங்களை விட்டு வெளியேறி திறந்த வெளி பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 27 பேர் காயமடைந்துள்ளதாக பெரு அவசர மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன், பெரு பாதுகாப்பு அமைச்சர் அமதியோ புளோரெஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமைகளை ஆய்வு செய்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அவசர நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

பெரு, உலகின் அதிக நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் இடம்பெறும் பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் எனப்படும் நில அதிர்வு வளையப் பகுதியில் அமைந்துள்ளது.

இந்த பகுதி சுமார் 40,000 கிலோமீட்டர் நீளத்தில் பரவி காணப்படுவதுடன், நியூசிலாந்து, இந்தோனேசியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் அலாஸ்கா வழியாக சிலி வரை பரவி இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular