இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு, குறிப்பாக நியூயார்க் நகருக்கு வருகை தந்தாலும், அவர் எந்தச் சூழ்நிலையிலும் கைது செய்யப்பட மாட்டார் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.
திங்கள்கிழமை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவொன்றில், அமெரிக்காவில் இருக்கும் காலப்பகுதியில் நெதன்யாகு “எந்த வகையிலும், எந்த வடிவத்திலும் கைது செய்யப்பட மாட்டார்” என டிரம்ப் தெரிவித்தார். அந்தப் பதிவில் நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானியின் பெயர் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு இஸ்ரேல் வழங்கிய ஒத்துழைப்பை அவர் பாராட்டியிருந்தார்.
முன்னதாக, எதிர்வரும் செப்டம்பரில் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நெதன்யாகு பங்கேற்றால், அவரைக் கைது செய்வது தொடர்பில் தனது நிர்வாகம் சட்டரீதியான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக நியூயார்க் மேயர் ஸோஹ்ரான் மம்தானி தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் வெளியான நேர்காணல் ஒன்றில், “பெஞ்சமின் நெதன்யாகு ஹேக்கில் இருக்க வேண்டியவர்” எனக் குறிப்பிட்ட மம்தானி, காசா போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) 2024 ஆம் ஆண்டு நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நியூயார்க் காவல்துறைக்கு வெளிநாட்டு அரசுத் தலைவரைக் கைது செய்ய உத்தரவிடும் சட்ட அதிகாரம் தனக்கு உள்ளதா என்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருவதாகவும், “சட்டம் அனுமதிப்பதை மட்டுமே செய்வோம்; புதிதாக சட்டம் உருவாக்க மாட்டோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
தனது மேயர் தேர்தல் பிரச்சாரத்தின் போதும், நெதன்யாகு நியூயார்க் நகருக்கு வந்தால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடியாணையை அமல்படுத்தும் வகையில் அவரைக் கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடுவேன் என மம்தானி அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், மம்தானியின் கருத்துக்களை இஸ்ரேல் அரசு நிராகரித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை “கங்காரு நீதிமன்றம்” என்றும், அதன் கைது வாரண்ட் “போலியானது” என்றும் விமர்சித்துள்ள இஸ்ரேல், மம்தானி தனது அரசியல் சிக்கல்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர்களாக இல்லாததுடன், அதன் அதிகார வரம்பையும் அங்கீகரிக்கவில்லை. மேலும், ICC-க்கு எதிராக தடைகள் மற்றும் அழுத்தங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
