வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று (10) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு மத்தியில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
பணவீக்கம் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவை மக்களின் வாழ்க்கைத்தரம், குடும்ப வருமானம் மற்றும் பொருளாதார நிலைமையில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், குறித்த பிரதேசங்களில் நிலவும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளின் பற்றாக்குறை, சுகாதாரம் மற்றும் கல்வித் தேவைகள், தரமான சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிரமங்கள், பாடசாலை கல்வி மற்றும் சிறுவர்களின் போசாக்கு தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்க வேண்டிய நடைமுறை ரீதியான நடவடிக்கைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
மேலும், குறித்த பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி, அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தேவையான தலையீடுகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
பிரதேச மட்டத்தில் மக்களின் உண்மையான பிரச்சினைகள் தொடர்பான தகவல்களைத் திரட்டி, அவற்றுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணுவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், எம்.ஏ.எம். தாஹிர், இளையதம்பி சிறிநாத், ஞானமுத்து ஸ்ரீநேசன், எம்.எஸ். உதுமா லெப்பை, செல்வம் அடைக்கலநாதன், இரா. சாணக்கியன், பத்மநாதன் சத்தியலிங்கம், கே. காதர் மஸ்தான், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
