2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச நிறைவேற்று அதிகாரிகள் நாளை (20) நாடளாவிய ரீதியில் ஒருநாள் அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 20 தொழிற்சங்கங்கள் இணைந்து இந்தப் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக, அரச நிறைவேற்றுச் சேவைகளில் தெரிவுசெய்யப்பட்ட சில துறைகளுக்கு மாத்திரம் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய 20 நிறைவேற்றுத் தரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அரச நிறைவேற்று அதிகாரிகள் கூட்டுக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுவே நாளைய பணிப்புறக்கணிப்புக்கான பிரதான காரணம் என அக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை அதிபர் தர அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொட்டுவ தெரிவித்துள்ளார்.
முன்பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையான அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றும் ஊழியர்களுக்கும் 25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 23ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தில் 7 பிரதான அதிபர் சங்கங்களும் சுமார் 20 ஆசிரியர் சங்கங்களும் ஒன்றிணைந்து பங்கேற்கவுள்ளதாகவும் நிமல் முதுன்கொட்டுவ மேலும் தெரிவித்துள்ளார்.
