வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயலால் இலங்கைக்கு நேரடியான பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும், புயலின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்டிய மத்திய கடற்பரப்புகளில் கடந்த சில நாட்களாக நிலவிய ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலை, தற்போது ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்ட புயலாக வலுப்பெற்றுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
இன்று (ஒக்டோபர் 26) அதிகாலை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த புயல் இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து கிழக்கே சுமார் 590 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மேலும் வலுப்பெற்று இன்று இரவு அல்லது நாளை அதிதீவிர புயலாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது இலங்கைக்கு நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தாது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\
புயலின் சுழற்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய வளிமண்டல மாற்றங்கள் காரணமாக இலங்கையில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை தொடரக்கூடும்.
இதன்படி, வடமத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான கனமழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\
புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஒக்டோபர் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் மற்றும் மத்திய கடற்பரப்புகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கும் கடல்சார் தொழிலாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த கடற்பரப்புகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுவதுடன், அலைகளின் சீற்றமும் அதிகரிக்கக்கூடும் என்பதால் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.\
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், மின்னல் தாக்கங்களும் ஏற்படலாம். எனவே, பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ‘அர்னாப்’ புயல் எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதியளவில் இந்தியாவின் ஒடிசா மாநிலப் பகுதியில் கரையைக் கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் புயலின் வலிமை படிப்படியாகக் குறையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
