நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உச்ச நீதிமன்றம் இன்று (21) திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக இந்தப் பிடியாணையைப் பிறப்பிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அதனை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கும் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், இன்று நீதிமன்றத்தில் ஆஜரான ஏனைய இரண்டு பிரதிவாதிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது, கஹவத்தை பகுதியில் அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில், பிரேமலால் ஜெயசேகர உள்ளிட்ட நான்கு பேருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
எனினும், குறித்த தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பின்னர் இருவரையும் விடுவித்து விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக பாதிக்கப்பட்ட தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பான விசாரணையை கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி நிறைவு செய்த உச்ச நீதிமன்றம், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மூன்று பிரதிவாதிகளுக்கும் அறிவித்தல் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரேமலால் ஜெயசேகர நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் வெளிநாட்டில் இருப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான திறந்த பிடியாணையைப் பிறப்பிக்க உத்தரவிட்டது.
