நாட்டில் மின்வெட்டு எப்போது முடிவுக்கு வரும் என்பது தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுவதாகவும், எரிசக்தி நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு அரசாங்கம் உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண குற்றஞ்சாட்டியுள்ளார்.
எதுல்கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எரிபொருள் விநியோகத்திற்காக QR குறியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், எரிபொருள் இல்லாத நிரப்பு நிலையங்களையும் நீண்ட வரிசைகளையும் இன்னமும் காணக்கூடியதாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதால், தோட்டப்புற மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் மாவு சார்ந்த உற்பத்திகளில் ஈடுபடுவோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிசக்தி நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவற்றுக்குத் நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், தற்போதைய நிலைமை மக்களின் உணவுப் பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் மேலும் பாதிப்பதாகக் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பிலும் விமர்சனம்
நாட்டுக்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்து வருவதாக அரசாங்கம் கூறினாலும், கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்திருந்த சீன முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளைக் கைவிட்டு வெளியேறி வருவதாக புத்திக பத்திரண தெரிவித்தார்.
இதனால், குறித்த முதலீட்டாளர்களுக்கு அமெரிக்க டொலர்களில் இழப்பீடு வழங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும், இது நாட்டின் பொருளாதார நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும், உள்ளூராட்சி மன்ற மட்டத்திலும் தொடர்ச்சியாக எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக அவர் கூறினார்.
இந்த எதிர்ப்பை ஆர்ப்பாட்டங்களுடன் மட்டும் மட்டுப்படுத்தாமல், அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துத் தரப்பினரையும் பொதுமக்களையும் ஒன்றிணைக்கும் பரந்த வேலைத்திட்டமொன்றை கட்சி முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பௌத்த துறவிகள் தொடர்பான தீர்மானங்கள் குறித்து கருத்து
பௌத்த துறவிகள் தொடர்பான விவகாரங்களில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் தனிநபர்களுக்கோ அமைச்சர்களுக்கோ இல்லை எனக் குறிப்பிட்ட புத்திக பத்திரண, இத்தகைய விடயங்கள் பௌத்த சாசன மரபுகள் மற்றும் சங்க சபைகளின் ஊடாகத் தீர்மானிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
அதேவேளை, பச்சைக்குத்துதல் (Tattoo) போன்ற தனிநபர் தெரிவுகளைக் கட்டுப்படுத்துவதற்கு பழைய இடதுசாரிச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களைப் பயன்படுத்த முயற்சிப்பது அடிப்படை உரிமைகளுக்கும் மனித சுதந்திரத்திற்கும் எதிரானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடிப்படை உரிமைகளை மதிக்காத எந்தவொரு அரசியல் இயக்கமும் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியாது எனவும் அவர் எச்சரித்தார்.
மீண்டும் மக்கள் போராட்டம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை
ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிலவும் அச்சச் சூழல் காரணமாக, 2022ஆம் ஆண்டைப் போன்றதொரு மக்கள் போராட்டம் மீண்டும் உருவாகும் அபாயம் காணப்படுவதாகவும் புத்திக பத்திரண தெரிவித்தார்.
மேலும், சுற்றாடலும் வனவிலங்குகளும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மட்டுமே சொந்தமானவை அல்ல என்றும், அவை எதிர்காலச் சந்ததியினருக்கும் உரியவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
சுற்றாடல் மீதான அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட அரசியல் இயக்கங்களாலேயே வனவிலங்குகள் மற்றும் சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
