வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும் இலங்கையில் உயர் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI) மிகவும் அவசியமானவை எனவும், அவை குறைவடைந்து வருவது நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள தரவுகளைச் சுட்டிக்காட்டியே அவர் இந்தக் கருத்தை முன்வைத்துள்ளார்.
விசேட கூற்றொன்றை முன்வைத்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, 2025ஆம் ஆண்டில் இலங்கைக்கு கிடைத்த நேரடி வெளிநாட்டு முதலீட்டுடன் ஒப்பிடுகையில், பங்களாதேஷுக்கு 1.7 மடங்கும், பாகிஸ்தானுக்கு 1.8 மடங்கும், மலேசியாவுக்கு 14.7 மடங்கும் முதலீடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், தாய்லாந்துக்கு 18.3 மடங்கும், வியட்நாமுக்கு 19.5 மடங்கும், இந்தோனேசியாவுக்கு 20.5 மடங்கும், இந்தியாவுக்கு 37.3 மடங்கும் அதிக முதலீடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் இலங்கையின் முதலீட்டு நிலை பலவீனமாக இருப்பது தெளிவாகின்றது எனவும் அவர் கூறினார்.
சட்டரீதியான நிச்சயமற்ற தன்மை, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள், ஒழுங்குமுறைகளில் காணப்படும் ஸ்திரமற்ற தன்மை உள்ளிட்ட காரணிகளே முதலீடுகள் குறைவடைவதற்கு வழிவகுப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை முதலீட்டுச் சபை ஒரே இடத்தில் அனைத்து சேவைகளையும் வழங்கும் ‘One Stop Shop’ என வர்ணிக்கப்பட்டாலும், நடைமுறையில் அது ‘One Block Shop’ ஆகவே காணப்படுவதாகவும் சஜித் பிரேமதாஸ விமர்சித்தார்.
முதலீடுகளை ஊக்குவிப்பதற்குப் பதிலாக அவற்றைத் தடுத்து நிறுத்தும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுவதால், இலங்கையின் முதலீட்டு ஈர்ப்புத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் உள்நாட்டு மோதல்கள் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் நிலைமை போன்ற சவாலான சூழ்நிலைகள் நிலவிய காலத்திலும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டத்தை நடைமுறைப்படுத்தி பெருமளவான இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, அதிகாரிகள் தங்களுக்கிடையிலான முரண்பாடுகளை ஒதுக்கி வைத்து, முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணும் வகையில், ஜனாதிபதி தலைமையில் துரித செயலணி ஒன்றை நியமித்து, நாட்டுக்கு அதிகளவான நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார்.
