Homeஉலகம்பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு நுழைவு விசா மறுப்பு

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு நுழைவு விசா மறுப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்கிற்கு செல்லவிருந்த பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு அமெரிக்கா மீண்டும் நுழைவு விசா மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரம் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தை முன்னிட்டு, பாலஸ்தீன அதிகாரிகள் மற்றும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த விசா கட்டுப்பாடுகளை அமெரிக்கா நீட்டித்துள்ளது. இதன் காரணமாகவே அப்பாஸும் இம்முறை பொதுச் சபைக் கூட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீன அதிகாரிகள் இஸ்ரேல்–பாலஸ்தீன மோதலை சர்வதேசமயப்படுத்த முயற்சிப்பதாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மற்றும் சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. பாலஸ்தீன தரப்பினர் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டும் அப்பாஸுக்கு அமெரிக்கா விசா மறுத்திருந்த நிலையில், அவர் ஐ.நா. பொதுச் சபையில் நேரடியாக கலந்துகொள்ள முடியாமல் காணொளி வாயிலாக உரையாற்றியிருந்தார். இந்த ஆண்டும் அவர் காணொளி மூலம் உரையாற்ற அனுமதிக்கப்படுவாரா என்பது தொடர்பில் ஐ.நா. பொதுச் சபையில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

1947ஆம் ஆண்டின் ஐ.நா. தலைமையக ஒப்பந்தத்தின் அடிப்படையில், நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. நடவடிக்கைகளில் பங்கேற்கும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளின் பயணத்தை அமெரிக்கா பொதுவாக அனுமதிக்க வேண்டும். எனினும், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் விசா கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என அமெரிக்கா தெரிவித்து வருகிறது.

இதேவேளை, பாலஸ்தீனம் ஐ.நாவில் முழு உறுப்பினர் நாடாக இல்லாமல் பார்வையாளர் நாடு என்ற அந்தஸ்தில் உள்ளது. ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளுக்கு இடையில் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரித்துள்ள நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா இதுவரை பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular