HomeTop newsமாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பெருமையளிக்கிறது - பிரதமர்

மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பெருமையளிக்கிறது – பிரதமர்

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் மற்றும் தடைகளைத் தாண்டி, துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் கல்வியில் முன்னேறி வருவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று (22) நடைபெற்ற பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சவால்கள், இடையூறுகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி தமது திறமை மற்றும் விடாமுயற்சியால் உயர்கல்வியில் முன்னேறியுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் சாதனை பாராட்டுக்குரியது என பிரதமர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக வழங்கப்படும் இந்த உதவிகள், மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு மேலும் வலுசேர்ப்பதற்காக வழங்கப்படுவதாகவும், அவர்கள் தமக்குப் பின்னால் வரும் மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள், வேதனைகள் மற்றும் நிராகரிப்புகளைத் தாண்டி சாதித்துள்ளமை அவர்களின் துணிச்சலையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்துவதாக பிரதமர் கூறினார். அவர்களின் வெற்றிக் கதைகள் எதிர்கால மாணவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவான மாற்றுத்திறனாளிகள் காணப்படுவது கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின் மிகக் கவலைக்குரிய விளைவுகளில் ஒன்றாகும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.

மீண்டும் ஒருபோதும் அவ்வாறான யுத்தம் ஏற்படாத வகையில் செயற்படுவதும், அதற்கு வழிவகுக்கும் காரணிகளை இல்லாதொழிப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பு எனக் குறிப்பிட்ட அவர், கடந்த காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழங்கிய பங்களிப்பையும் பிரதமர் பாராட்டினார்.

ஜனாதிபதி நிதியம் கடந்த காலங்களில் சலுகைகள் மற்றும் வரப்பிரசாதங்களைப் பெற்றவர்களுக்கு மாத்திரம் உதவும் நிறுவனமாக இருந்த நிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது உண்மையில் உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் கண்டு, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவிகளை வழங்கும் நிறுவனமாக அது மாற்றப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம், ஜனாதிபதி நிதியத்தை மக்களுக்கு நெருக்கமான நிறுவனமாக மாற்றி, உதவி தேவைப்படும் மக்களுக்கு நேரடியாக உதவிகளை வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வித்துறைக்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாகத் தெரிவித்த பிரதமர், முன்பள்ளிக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு தேவையான பல்வேறு உதவித் திட்டங்கள் ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை மேலும் இலகுவாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்கான முன்னோடித் திட்டங்களும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார்.

“மாற்றுத்திறனாளிகளுக்கும் சமூகத்தின் ஏனையோருக்கு நிகரான சம வாய்ப்புகளும் சம உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்” என பிரதமர் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மாற்றுத்திறனாளி மாணவரின் துணிச்சல், போராட்டம் மற்றும் வெற்றிக் கதைகள் ஏனையோருக்கு நம்பிக்கையையும் முன்மாதிரியையும் வழங்கும் வகையில் சமூகத்தில் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த உதவித்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி நிதியத்தின் மேலதிக செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular