சீனாவில் நடைபெற்ற உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டியில், மனித உருவ ரோபோ ஒன்று 100 மீற்றர் ஓட்டத்தை 9.39 விநாடிகளில் நிறைவு செய்து, ஜமைக்காவின் முன்னாள் தடகள வீரர் உசைன் போல்ட்டின் 9.58 விநாடி உலக சாதனையை விட வேகமாக ஓடி சாதனை படைத்துள்ளது.
பெய்ஜிங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது உலக மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகளில் 16 நாடுகளைச் சேர்ந்த 2,056 மனித உருவ ரோபோக்கள் பங்கேற்றுள்ளன.
பெய்ஜிங்கின் தேசிய வேகப் பனிச்சறுக்கு மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் ஓட்டப்பந்தயம், கால்பந்து, நடனம் மற்றும் தொழில்துறை திறன் போட்டிகள் உள்ளிட்ட 51 வகையான நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
ஹியூமனாய்டு ரோபோட் இன்னோவேஷன் அமைப்பினால் உருவாக்கப்பட்ட ‘தியாங்காங் அல்ட்ரா’ (Tiangong Ultra) ரோபோவும், ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான ஹானர் உருவாக்கிய ‘லைட்னிங்’ (Lightning) ரோபோவும் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றன.
இதில் ‘தியாங்காங் அல்ட்ரா’ 100 மீற்றர் தூரத்தை 9.39 விநாடிகளில் கடந்து முதலிடத்தைப் பெற்றது. ஹானர் நிறுவனத்தின் ‘லைட்னிங்’ ரோபோ 9.47 விநாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இதன் மூலம், 2009ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் உசைன் போல்ட் பதிவு செய்த 9.58 விநாடி உலக சாதனையை இரண்டு ரோபோக்களும் முறியடித்துள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற மனித உருவ ரோபோ போட்டியில் ‘தியாங்காங் அல்ட்ரா’ 100 மீற்றர் தூரத்தை 21.50 விநாடிகளில் நிறைவு செய்திருந்த நிலையில், தற்போது அதன் ஓட்ட வேகம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
சீன ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களின்படி, போட்டிக்கு முன்னதாக நடத்தப்பட்ட சோதனை ஓட்டத்தில் இந்த ரோபோ 9.32 விநாடிகளில் 100 மீற்றரை கடந்ததுடன், அதிகபட்சமாக மணிக்கு சுமார் 52.2 கிலோமீற்றர் வேகத்தை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரோபோ சுமார் 169 சென்டிமீற்றர் உயரம் கொண்டதுடன், அதன் கால்களின் நீளம் 95 சென்டிமீற்றராக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிக்கு முன்னதாக ஆராய்ச்சியாளர்கள் அதன் கால்களின் நீளத்தை மேலும் 10 சென்டிமீற்றர் அதிகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், ரோபோவின் 9.39 விநாடி நேரத்தை உசைன் போல்ட்டின் மனித உலக சாதனையுடன் நேரடியாக ஒப்பிடும்போது, போட்டி விதிமுறைகள் மற்றும் ஓட்டத்தின் அளவீட்டு முறை உள்ளிட்ட தொழில்நுட்ப வேறுபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது குறிப்பிடத்தக்கது.
