இலங்கையில் பொலித்தீன் பயன்பாட்டை 26 மில்லியன் அலகுகளில் இருந்து 16 மில்லியன் அலகுகளாகக் குறைக்க முடிந்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டு ஒதுக்கீட்டின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கும், 2027ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது.
இதன்போதே நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகள் பொலித்தீன் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள குறைப்பு தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
சுற்றுச்சூழல் பாதிப்பை மேலும் குறைக்கும் நோக்கில், பொலித்தீனுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உணவு மற்றும் பானங்களின் தரநிலைகள் மற்றும் விலைக் கட்டுப்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு உரிய முறையில் பதிலளிக்கும் வகையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் விழிப்புடன் செயற்படுவதன் அவசியம் குறித்தும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
