HomeTop newsசைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

சைகை மொழி சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சர்வதேச ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் 35ஆவது குழு அமர்வில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகருக்குப் புறப்படுவதற்கு முன்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த அமர்வு இன்று (14) மற்றும் நாளை (15) ஆகிய இரண்டு நாட்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது, இது தொடர்பாக இலங்கையினால் சமர்ப்பிக்கப்பட்ட முதலாவது அறிக்கை மீளாய்வு செய்யப்படவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் கீழ் கடந்த 18 மாத காலத்தில் விசேட தேவையுடையவர்களுக்காக பல கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் நலனுக்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.

குறிப்பாக, இலங்கை வரலாற்றில் முதன்முறையாக விசேட தேவையுடைய ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் விசேட தேவையுடையவர்கள் தொடர்பான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்து, சட்டவாக்கச் செயல்பாட்டில் தீவிரமாகப் பங்காற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், விசேட தேவையுடையவர்களின் உரிமைகள் தொடர்பான சட்டத்தைத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதுடன், அது தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் உள்ளிட்ட பல அமைச்சுக்கள் விசேட தேவையுடையவர்களின் தேவைகளுக்காக ஒருங்கிணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் உபாலி பன்னிலகே மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular