சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கிய முன்னாள் பிரதமர் ஜூ ரோங்ஜூ (Zhu Rongji) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 11 மணியளவில் காலமானார்.
அவரது மறைவுக்கு இரஙகல் தெரிவித்து, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு, தேசிய மக்கள் பேரவையின் நிலைக்குழு, அரச மன்றம் மற்றும் சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசியக் குழு ஆகியவை கூட்டாக இரங்கல் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
அந்த அறிக்கையில், ஜூ ரோங்ஜூ சிறந்த கட்சி உறுப்பினராகவும், காலத்தால் சோதிக்கப்பட்ட விசுவாசமான கம்யூனிஸ்ட் போராளியாகவும், தலைசிறந்த பாட்டாளி வர்க்கப் புரட்சியாளர், இராஜதந்திரி மற்றும் கட்சி, நாட்டின் சிறந்த தலைவராகவும் போற்றப்பட்டுள்ளார்.
ஜூ ரோங்ஜூ 1998ஆம் ஆண்டு சீனாவின் பிரதமராகப் பதவியேற்றார்.
அவரது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களில், நட்டத்தில் இயங்கிய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கும் விரிவான திட்டம், நகர்ப்புற வீடமைப்புத் துறையை தனியார்மயமாக்குதல் மற்றும் சொந்த வீட்டு உரிமையை ஊக்குவித்தல் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
சீனாவின் பொருளாதாரத்தை சந்தை நோக்கிய பாதையில் முன்னெடுத்துச் செல்வதில் ஜூ ரோங்ஜூ முக்கிய பங்காற்றியதாகவும், அவரது பொருளாதாரக் கொள்கைகள் நாட்டின் அடுத்தடுத்த வளர்ச்சிக்கு அடித்தளமிட்டதாகவும் கருதப்படுகிறது.
