ஹோமாகம, கட்டுவான தொழில்பேட்டையில் அமைந்துள்ள ஹெல்மெட் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விரிவான விசாரணை நடத்தி, தாமதமின்றி முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு தொழில் பிரதி அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இன்று (21) காலை சுமார் 9.45 மணியளவில் மூன்று மாடிகளைக் கொண்ட குறித்த தொழிற்சாலைக் கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவம் இடம்பெற்ற வேளையில் 80-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தீ விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீ மிக வேகமாகப் பரவியதால், தீயணைப்புப் படையினர் பல மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தொழிற்சாலையில் பின்பற்றப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள், தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விரைவான விசாரணை நடத்தி, முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
