சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் அல்லது ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் வழங்குமாறு இலங்கை பொலிஸார் கடந்த ஜூலை 9 ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) கோரிக்கை விடுத்துள்ளது.
முறையான வழிகாட்டுதல்கள் இன்றி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பு, குறிப்பாக கிராமப்புற மக்களை தேவையற்ற துன்புறுத்தல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் சுயாதீன விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘Statement of Common Purpose’-இன் அடிப்படையில், சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுதல், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல் மற்றும் பொது அமைதியை பாதுகாத்தல் ஆகியவையே பொலிஸாரின் பிரதான பொறுப்புகளாகும் என்றும், தற்போதைய அறிவிப்பு அந்த அடிப்படை கொள்கைகளுக்கு முரணானதாக இருப்பதாகவும் ஐ.தே.க. சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் சொத்து வரி (Wealth Tax) நடைமுறையில் இல்லாத நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வமான வழிகளில் கிராமப்புற மக்கள் சொத்துக்களை ஈட்டியிருப்பதுடன், வரி முறைமை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சிலர் அவற்றை முறையாக வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடும் என்றும் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும், தெளிவான சட்டபூர்வ வருமான ஆதாரம் இன்றி ஈட்டப்பட்ட சொத்துக்களை அடையாளம் காண்பதற்கான குறிப்பிட்ட நடைமுறைகள் இல்லாத நிலையில், இந்த அறிவிப்பு பொதுமக்களை துன்புறுத்தும் கருவியாக மாறும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து தெளிவான வழிகாட்டுதல்களை தயாரித்திருக்க வேண்டியது அவசியம் என்றும் ஐ.தே.க. வலியுறுத்தியுள்ளது.
எனவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற்று, பொதுமக்களுக்கு சிரமம் அல்லது குழப்பம் ஏற்படாத வகையில் தெளிவான மற்றும் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுடன் புதிய அறிவிப்பொன்றை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
