மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சகல ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்திற்குள்ளும், அதற்கு வெளியேயும் முன்னெடுக்க எதிர்பார்க்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி (JVP) அரசாங்கம் இன்று அதிகார மமதையுடன் செயற்பட்டு வருகின்றது. ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக ஆட்சியைப் பிடித்துவிட்டு, இன்று ஜனநாயகத்தை முடக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். தனிக் கட்சி ஆட்சியை நோக்கி நாட்டை கொண்டு சென்று கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளதால், இதற்கு இடமளிக்க முடியாது எனவும் சஜித் பிரேமதாச கூறினார்.
கண்டி மல்வத்து மகா விகாரைக்கு இன்று (21) காலை விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மல்வத்து மாநாயக்க தேரர் வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து மல்வத்து பீடத்தின் அநுநாயக்க தேரர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
பின்னர் அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர், அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வண, வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து நலம் விசாரித்து ஆசி பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
” அரசாங்கத்திற்கு தெளிவான மக்கள் ஆணை கிடைத்துள்ளதால், மக்களுக்காக நல்லதொரு வேலைத்திட்டத்தை அவர்களால் முன்னெடுத்திருக்க முடியும். ரணசிங்க பிரேமதாச அவர்கள் நாட்டைப் பொறுப்பேற்கும்போது வடக்கிலும் தெற்கிலும் பயங்கரவாதம் நிலவியதுடன், வளைகுடாப் போரும் (Gulf War) நடந்துகொண்டிருந்தது.
நாலாபுறமும் நெருப்பு எரிந்துகொண்டிருந்த போதும், நாட்டு மக்களுக்கு நலன்புரி சேவைகளைப் பெற்றுக் கொடுக்க அவர் நடவடிக்கை எடுத்தார். ஆனால் இன்று வெறும் வெற்றுப் பேச்சுக்களாலும் பொய்களாலும் வாழும் ஒரு அரசாட்சியே நாட்டில் காணப்படுகின்றது. அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்தினால், இந்த அரசாங்கத்தின் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டிருக்க முடியும் என்று எதிர்க்கட்சித் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ச்சியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி வருகின்றது. தமது கட்சி தேர்தலுக்குத் தயாராக உள்ள போதிலும், அரசாங்கம் மக்கள் ஆணைக்கும் தேர்தலுக்கும் அஞ்சுவதால் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) கொள்கை ரீதியாக நாம் இணைவோம். இரு கட்சிகளினதும் தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொண்டு இந்தப் பயணத்தை தொடருவோம். வெற்றியைப் பெறுவதற்குப் பெரும்பான்மை வாக்குகளும், பெரும்பான்மையான மக்களினது நம்பிக்கையும் அவசியமாகும். 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மக்கள் வெறும் போலித்தனங்களுக்கும் சோபனைகளுக்கும் ஏமாந்து போனர். நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகக் கடந்த தேர்தல்களில் தொகுதி ஆசனங்களையும், பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகளையும் எங்ஙனம்
பெற்றுக்கொண்டோம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆகவே, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட அனைத்துக் கட்சிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்ள முடியும். நடுத்தர பாதையைப் பின்பற்றும் ஐக்கிய மக்கள் சக்தியோடு, தீவிர போக்கு கொண்ட அரசியலிலிருந்து விடுபட்டு எம்மோடு வந்து இணைந்து கொள்ளுமாறு சகல தரப்புகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம். இங்கு பதவிகளைப் பகிர்ந்துகொள்ளும் சூதாட்டங்கள் எதுவும் நடக்காது. அதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
