பாதுகாப்பு அமைச்சின் 2026ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படுகின்ற திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (5) இடம்பெற்றது.
குறித்த சந்திப்பானது ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
2026 ஆம் ஆண்டுக்காக பாதுகாப்பு அமைச்சுக்கு 530 பில்லியன் ரூபாய் மொத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, சிவில் பாதுகாப்பு திணைக்களம், கெடட் அதிகாரிகளுக்காக செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள வளிமண்டலவியல் திணைக்களம், கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு என்பவற்றால் செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது தனித்தனியாக மீளாய்வு செய்யப்பட்டது.
கல்வி மற்றும் திறன் அபிவிருத்திக்குத் தேவையான நிறுவனக் கட்டமைப்பை உருவாக்குதல், நிர்மாணத்துறை உள்ளிட்ட தொழிற்துறைப் பிரிவுகளுக்கு இராணுவத்தினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதுடன் அதற்காக விசேட கொடுப்பனவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கை பாதுகாப்புப் படைக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில்சார் நிபுணத்துவத்தில் சிறந்த ஆயுதப் படையாக உலகில் செயற்படுவதற்கான உயர் ஆற்றல் காணப்படுவதுடன், அதற்காக அவர்களைத் தயார் செய்தல் மற்றும் தேவையான வசதிகளை வழங்குதல் அவசியமானது என்றும் இதன்போது ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
