பாடசாலை மாணவர்களிடையே தற்போது வைரஸ் மெனிஞ்சைடிஸ் (Meningitis) எனப்படும் மூளைக்காய்ச்சல் நோய் பரவி வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என பிரதான தொற்றுநோயியல் நிபுணர் விசேட வைத்தியர் பாலித கருனாபென தெரிவித்துள்ளார்.
முதன்முதலில் தெனியாய பகுதியில் இந்த நோய் பதிவாகியிருந்த நிலையில், தற்போது தியத்தலாவை, வெலிமடை மற்றும் ரிகில்லகஸ்கட உள்ளிட்ட பகுதிகளிலும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அதன்படி, தியத்தலாவையில் 28 பேரும், வெலிமடையில் 13 பேரும், ரிகில்லகஸ்கட பகுதியில் சுமார் 25 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் கூறியதாவது, இந்த நோய் “வைரஸ் மெனிஞ்சைடிஸ்” என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், நோய்ப்பரவியல் பிரிவு மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகள் இணைந்து மேலதிக ஆய்வுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்த நோய் பெரும்பாலும் பாடசாலை மாணவர்களிடையே பரவி வருவதாகவும், கடுமையான காய்ச்சல், தலைவலி மற்றும் வாந்தி போன்றவை முக்கிய அறிகுறிகளாகக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், முறையான சிகிச்சை வழங்கப்பட்டால் 5 முதல் 7 நாட்களுக்குள் குணமடையக்கூடிய நோயாக இருப்பதால் பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அதேவேளை, தற்போதைய மழைக்கால சூழ்நிலை மற்றும் வெசாக் கால தன்சல் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிப்பது அவசியம் எனவும் அவர் எச்சரித்தார்.
குறிப்பாக, அசுத்தமான நீர் மற்றும் உணவுகள் மூலம் இந்த நோய் பரவக்கூடியதால், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரமான உணவுப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக பாடசாலைகளுடன் இணைந்து சுகாதார அதிகாரிகள் தீவிர ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசேட வைத்தியர் பாலித கருணாபேம தெரிவித்தார்.
