Homeஉள்நாடுபொதுநலவாய செயலாளர் நாயகத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு

பொதுநலவாய செயலாளர் நாயகத்துடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, நேற்று(21) லண்டனில் அமைந்துள்ள மார்ல்பரோ இல்லத்தில் (Marlborough House), பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போச்வே (Shirley Ayorkor Botchwey) அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய கற்றல் பேரவையின் (COL) 43 ஆவது நிர்வாகச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், பொதுநலவாய கட்டமைப்பிற்குள் இருதரப்பு ஒத்துழைப்பைப் பலப்படுத்துவது மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடினார்.

பொதுநலவாய அமைப்பினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஒத்துழைப்பிற்குப் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்ததோடு, பொதுநலவாய அமைப்பின் வகிபாகத்தையும் வினைத்திறனையும் மேலும் பலப்படுத்துவதில் செயலாளர் நாயகம் வழங்கி வரும் தலைமைத்துவத்தைப் பாராட்டினார்.

அத்தோடு, காலநிலை மாற்றம், காலநிலை நிதியுதவி, ஜனநாயக நல்லாட்சி, பெண்களின் அரசியல் பங்களிப்பு மற்றும் உறுப்பு நாடுகளுக்குப் பொதுநலவாய அமைப்பின் ஆதரவு ஆகிய விடயங்கள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

பொதுநலவாய செயலகம் வழங்கி வரும் தொடர்ச்சியான ஒத்துழைப்பைப் பாராட்டிய பிரதமர், நாட்டில் காணப்படுகின்ற தாக்குப்பிடிக்கும் தன்மையை மேலோங்கச் செய்தல், நிலைபேறான அபிவிருத்தி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நல்லாட்சி ஆகியவற்றில் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

தொழில்நுட்ப உதவி, மனிதவள மேம்பாட்டுத் திட்டங்கள், காலநிலை நிதியுதவி மற்றும் தேர்தல் முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கு இலங்கைத் தொடர்ந்தும் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகச் செயலாளர் நாயகம் இதன்போது உறுதியளித்தார்.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின் வேலைத்திட்டங்கள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் சேனாதீர, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் பலரும் பிரதமருடன் கலந்துகொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular