இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை தொடரும் அபாயம் காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்று (15) காலை 9.30 மணியளவில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட காலி, மாத்தறை மாவட்டங்களுக்கு இந்த சிவப்பு எச்சரிக்கை அமலில் உள்ளது.
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்து செயற்பட்டு வருவதுடன், அது அடுத்த 36 மணிநேரங்களில் நாட்டை விட்டு விலகிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவிற்கு மிகக் கடும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை நேரங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், பொதுமக்கள் அவசியமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
