2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்பு அமுல்படுத்தப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று (05) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அதற்கான தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
முன்னதாக அச்சிடப்பட்ட பாடத்திட்டங்களில் காணப்பட்ட குறைபாடுகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு தனது பணியை நிறைவு செய்துள்ளதாகவும், அதன்பேரில் திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டு இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மீளாய்வு செய்யப்பட்ட புதிய பாடத்திட்டத் தொகுதிகள் இம்மாதத்திலேயே அச்சிட அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய கல்வி மாற்றங்களின் கீழ் ஆசிரியர்களுக்கான பயிற்சி திட்டங்கள் எதிர்வரும் ஜூன் மாதம் ஆரம்பமாகும் என்றும், இதற்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த மறுசீரமைப்பு தொடர்பான விளக்க நிகழ்ச்சிகள் ஜூலை மாதத்தில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த தகவல்களை எதிர்க்கட்சித் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் வெளியிட்டார்.
