Homeஉள்நாடுஎன்.பி.பி. ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லை!

என்.பி.பி. ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லை!

“இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் இனவாதத்தையே மூலதனமாகக் கொண்டுள்ளன. ” என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

கிளிநொச்சி, சோரன்பற்று பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தற்போதைய நிர்வாகச் சீர்கேடுகள் குறித்து அவர் தெரிவிக்கையில்,

“அரசு கொள்வனவு செய்த நிலக்கரியின் எரிபற்று நிலை வெறும் 20 வீதமாகவே உள்ளது. இதனால் இயந்திரங்கள் பழுதடைந்து நாட்டுக்குப் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நட்டத்தை மக்களிடமே அரசு அறவிடப் போகின்றது.

மத்திய வங்கியில் 25 மில்லியன் டொலர் காணாமல்போயுள்ளது. 15 உயர்மட்ட அதிகாரிகள் கையெழுத்திட்ட பின்னரே இந்த நிதி எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஊழல்கள் தொடரும் வரை இலங்கை ஒருபோதும் முன்னேறப் போவதில்லை.” – என்றார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிக்குகள் போதைப்பொருளுடன் கைதான சம்பவம் குறித்து அவர் கடும் கண்டனம் வெளியிட்டார்.

“நல்லதைச் சொல்லிக்கொடுக்க வேண்டியவர்களே 110 கோடி பெறுமதியான போதைப்பொருளைக் கடத்தி வந்து ஒரு சந்ததியையே அழிக்க முற்படுகின்றனர். பரந்தன் பகுதியில் அண்மையில் போதைப்பொரூள் காரணமாக ஒரு இளைஞர் உயிரிழந்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் எமது இனத்தை அழிப்பதற்கே வழிவகுக்கும்.” – என்றார்.

ஜனாதிபதி அநுரவின் அண்மைய யாழ்ப்பாணம் விஜயம் குறித்தும் அவர் விமர்சித்தார்.

“அநுர ஆட்சிக்கு வந்தால் மாற்றம் வரும் எனச் சிலர் பேசினார்கள். ஆனால் ஒன்றரை வருடங்கள் கடந்த பின்னரும் எந்த மாற்றமும் இல்லை. வலிகாமம் வடக்கில் அவர் கையசைத்து நடந்ததை மக்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். உண்மையில் ‘உங்களுக்குக் காணி தரமாட்டேன், அமைதியாக இருங்கள்’ என்று சொல்லியே அவர் கை காட்டினார்.” – என்றார்.

இனவாதத்தைச் சொல்லி தமிழர்களை அழிப்பதிலும், பணம் உழைப்பதிலும் மட்டுமே ஆட்சியாளர்கள் குறியாக உள்ளனர் என்றும் சிறீதரன் எம்.பி. தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular