தற்போதைய சட்ட கட்டமைப்பின் கீழ் இலங்கைவாசிகளுக்கு இடையிலான பணப்பரிமாற்றங்களுக்கு டிஜிட்டல் சொத்துக்களை (Digital Assets) பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை ஃபின்டேக் (Fintech) விழாவில் கலந்துகொண்டு நேற்று(03) உரையாற்றிய மத்திய வங்கி ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,
உள்நாட்டுப் பரிவர்த்தனைகளின் போது இலங்கை ரூபாய்க்குப் பதிலாக டிஜிட்டல் சொத்துக்கள் மாற்றுப் பயன்பாட்டிற்கு வருவதைத் தடுப்பதற்கும், நாட்டின் நிதி இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது அவசியமானது எனச் சுட்டிக்காட்டினார்.
டிஜிட்டல் சொத்துக்கள் உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் நிதித் துறைக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கக்கூடும் என்பதை ஏற்றுக்கொண்ட அவர், அதற்குத் தெளிவான விதிமுறைகளும் பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளும் இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
தொழில்நுட்பம் வளர்ச்சியடையும் போது அதற்கு இணையான ஒழுங்குமுறைத் தெளிவும் வளர வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பொறுப்புணர்வுமிக்க புதுமைகளுக்கு ஒழுங்குமுறைகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன், சில டிஜிட்டல் சொத்துக்கள் காரணமாக நுகர்வோர்கள் சந்தையின் அதிகப்படியான விலை மாற்ற அபாயத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதுடன், சட்டவிரோத நிதிச் செயல்பாடுகளுக்கும் அவை பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் எச்சரித்தார்.
நிதித் தொழில்நுட்பம் சார்ந்த சைபர் தாக்குதல்கள், செயல்பாட்டு முடக்கங்கள், மோசடிகள், தரவு மீறல்கள் மற்றும் முழுமையற்ற நுகர்வோர் பாதுகாப்பு உள்ளிட்ட பல அபாயங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை டிஜிட்டல் நிதிச் சேவைகளை விரிவாக்கும் போது நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை எந்த வகையிலும் விட்டுக்கொடுக்கக் கூடாது என கலாநிதி வீரசிங்க மேலும் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், மத்திய வங்கி நிதிப் புதுமைகளுக்குத் திறந்த மனதுடன் இருப்பதாகவும், பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் புதிய நிதி தீர்வுகளைச் சோதிப்பதற்காக ‘ஃபின்கேக் ஒழுங்குமுறை மணல்பெட்டி’ (Fintech Regulatory Sandbox) முறைமை ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.
நிதி ஸ்திரத்தன்மை, பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பை முன்னுரிமையாக உறுதிப்படுத்தும் அதே வேளையில், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் இத்துறையின் போட்டியை ஊக்குவிக்கவும் மத்திய வங்கி தொடர்ந்து செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
