அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் செலவிடும் ஒவ்வொரு 100 ரூபாயிலும் 85 ரூபாய் கடனாகப் பெறப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உள்நாட்டு வருவாயையும் சேமிக்கப்பட்ட நிதியையும் பயன்படுத்துவது நடைமுறைக்கு ஒவ்வாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (14) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 1,750 பில்லியன் ரூபாயில், 1,493 பில்லியன் ரூபாய் கடனாகப் பெறப்படவுள்ளதாகவும், மற்றுமொரு பகுதி உதவிகளின் ஊடாகப் பெறப்படவுள்ளதாகவும், எஞ்சிய தொகை அரச வருவாயிலிருந்து ஈடுசெய்யப்படவுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகச் செலவிடாமல், திறைசேரியின் நிதியை அதிகரிப்பதற்கான வழிமுறையாக அதனைப் பயன்படுத்துவது நியாயமற்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மக்களின் அபிவிருத்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், கிராமப்புற வீதிகள், சிறுபாலங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார முகாமைத்துவத்தையும் விமர்சித்த அவர், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்வு உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் செல்வந்த வர்த்தகர்களுக்கே அதிக நன்மைகளை வழங்குவதாகவும், அதேவேளை பொதுமக்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் போதிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், வெளிநாட்டு முதலீட்டாளர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் புதிய முதலீட்டாளர்களை நாட்டுக்கு ஈர்ப்பதற்கும் அரசாங்கம் தெளிவான திட்டமொன்றை வகுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களையும் அவர்களுக்கு ஆதரவளிக்கும் அரச அதிகாரிகளையும் சந்தேகக் கண்ணோட்டத்துடன் அணுகுவதால் முதலீட்டுச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக, விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குதல், மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளைக் குறைத்தல், வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் உள்ளிட்டவற்றை இலக்காகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
