போரினால் சிதைந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கும், இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்களுக்கும் மத்தியில், காசா பகுதியில் 250 பாலஸ்தீனிய ஜோடிகளுக்கான பிரம்மாண்டமான கூட்டுத் திருமண விழா ஒன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
காசாவின் கடற்கரையோர விருந்து மண்டபம் ஒன்றில் நடைபெற்ற இந்தத் திருமண விழா, ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘ஆபரேஷன் கேலன்ட் நைட் 3’ (Operation Gallant Knight 3) மனிதாபிமான நடவடிக்கையின் கீழ் விசேட திட்டமொன்றின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போர் மற்றும் இடம்பெயர்வு காரணமாகக் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு ஆதரவளிப்பதுடன், காசா மக்களின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்தத் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகக் கிடைத்த 11,622 விண்ணப்பங்களிலிருந்து, விசேட குலுக்கல் முறையின் மூலம் தம்பதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
திருமண விழாவின் போது புதுமணத் தம்பதிகள் பாரம்பரிய இசைக்கு நடனமாடியதுடன், அலங்கரிக்கப்பட்ட திருமணக் கார்கள் காசாவின் கடற்கரை வீதியில் அணிவகுத்துச் சென்றன.
மேலும், விழா நடைபெற்ற வளாகம் முழுவதும் பாலஸ்தீன மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசியக் கொடிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தொடர்ச்சியான இராணுவ மோதல்கள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், தமது வாழ்க்கையைத் தொடரவும் பாரம்பரிய கலாசாரத்தைப் பாதுகாக்கவும் பாலஸ்தீனிய மக்கள் கொண்டுள்ள உறுதியின் அடையாளமாக இந்தக் கூட்டுத் திருமண நிகழ்வு பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் காசாவில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட போதிலும், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2023 ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 251 பேர் பணயக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காசா பகுதியில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்தது.
காசா சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து 74,640க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான கடுமையான போர்ச் சூழல், பொருளாதார நெருக்கடி மற்றும் மனிதாபிமானப் பாதிப்புகளுக்கு மத்தியிலும், 250 பாலஸ்தீனிய ஜோடிகள் ஒரே மேடையில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
போரின் அழிவுகளுக்கு மத்தியிலும் அன்பு, நம்பிக்கை மற்றும் புதிய வாழ்க்கைக்கான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக இந்தக் கூட்டுத் திருமணம் அமைந்துள்ளது.
