Homeஉலகம்நெதன்யாகுவுக்கு சவாலாக உருவெடுத்த காடி ஐசன்கோட்

நெதன்யாகுவுக்கு சவாலாக உருவெடுத்த காடி ஐசன்கோட்

120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் எந்தவொரு கட்சிக் கூட்டணிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் அரசியல் இழுபறி ஏற்பட்டுள்ளது.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிகுட் கட்சி தலைமையிலான கூட்டணி 53 இடங்களையும், முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டின் யாஷிர் கட்சி தலைமையிலான கூட்டணி 48 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

அதேவேளை, அரபுக் கட்சிகளின் கூட்டணியான ஜாயின்ட் லிஸ்ட் 11 இடங்களையும், ரா-அம் கட்சி 8 இடங்களையும் பெற்றுள்ளன.

இதனால் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் அரபுக் கட்சிகளின் ஆதரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. புதிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காடி ஐசன்கோட் ஆகியோர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், ஏற்கனவே நெதன்யாகுவிற்கு ஆதரவு வழங்கி வந்த யுனைடெட் தோரா ஜூடாயிசம் கூட்டணிக் கட்சி தனது ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளது. இக்கட்சி நாடாளுமன்றத்தில் 7 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்கும் பொறுப்பை யாருக்கு வழங்குவது? – அதிபர் ஆலோசனை

இந்நிலையில், புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடன் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைகளின்போது 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காடி ஐசன்கோட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், 46 உறுப்பினர்கள் பெஞ்சமின் நெதன்யாகுவை அரசாங்கம் அமைக்கப் பரிந்துரைத்துள்ளனர். மேலும், 7 உறுப்பினர்கள் இருவரில் எவருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அதிபர் ஐசக் ஹெர்சாக்,

ஆலோசனைகளின் முடிவுகள் தெளிவாகத் தோன்றினாலும், புதிய அரசாங்கத்தை அமைக்கும் திறன் யாருக்கு உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சட்டரீதியாகத் தனக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், பல்வேறு அரசியல் குழுக்களுக்கு இடையிலும், அவற்றின் உட்பிரிவுகளுக்கு இடையிலும் காணப்படும் பரஸ்பர எதிர்ப்பு மற்றும் வீட்டோ அதிகாரங்கள் காரணமாக, யாரால் புதிய அரசாங்கத்தை அமைக்க முடியும் என்பது இன்னும் முழுமையாகத் தெளிவாகவில்லை எனவும் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் நேரடியாகவும் விரைவாகவும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து இறுதி முடிவொன்றை எடுக்க முயற்சிப்பதாகவும், இஸ்ரேல் மக்களுக்காக நிலையான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பை பெஞ்சமின் நெதன்யாகுவிற்கா அல்லது காடி ஐசன்கோட்டிற்கா வழங்குவது என்பது தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் 8 ஆம் திகதி அதிபர் ஐசக் ஹெர்சாக் வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular