HomeTop news2027 வரவு செலவுத் திட்டத்தில் PAYE வரி வரம்பு மேலும் அதிகரிப்பு

2027 வரவு செலவுத் திட்டத்தில் PAYE வரி வரம்பு மேலும் அதிகரிப்பு

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக உழைக்கும் போது செலுத்தும் வரி (PAYE) அறவிடப்படும் வருமான வரம்பை மேலும் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (07) நடைபெற்ற தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாய் வருமானம் பெறுவோருக்கு அறவிடப்பட்டு வந்த PAYE வரியை, ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறுவோருக்கு மாத்திரம் பொருந்தும் வகையில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

அந்த வருமான வரம்பை எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மேலும் உயர்த்தி மக்களுக்கு வரிச்சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கான அத்தியாவசிய கொடுப்பனவுகளை 100 சதவீதம் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

பொது அரச சேவையாளர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தின் அடுத்த கட்ட அதிகரிப்பும் 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

சிலர் ஏற்கனவே கொடுப்பனவுகள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அத்தியாவசிய கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும், சில குறிப்பிட்ட கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்தார்.

மேலும், 2028ஆம் ஆண்டில் அடிப்படைச் சம்பளத்தை அதிகரிப்பதற்கான தேவைப்பாடு இல்லாத காரணத்தினால், அந்த ஆண்டில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular