கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பில் கொழும்பு மாநகர முதல்வர் விராய் கேலி பல்தசார் விளக்கமளித்துள்ளார்.
கொழும்பு நகரின் வடிகால் கட்டமைப்புகள் பல வருடங்களாக சுமார் 30 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்கக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், நேற்று திடீரென 129 மில்லிமீற்றர் அளவிலான அசாதாரணமான மழைவீழ்ச்சி பதிவானதால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாரிய சிக்கல்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு கொழும்பு மாநகரசபை தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கொழும்பு மாநகரசபை, தாழ்நில அபிவிருத்தி அதிகாரசபை, பொலிஸார், முப்படையினர் மற்றும் பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்து வெள்ள நீரை அகற்றும் மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சுமார் 30 முதல் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியைத் தாங்கக்கூடியதாக இருந்த சில வடிகால் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு 100 மில்லிமீற்றர் வரை தாங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், மிகக் குறுகிய காலத்தில் 129 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானமை வடிகால் கட்டமைப்புகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாகவும் அவர் விளக்கியுள்ளார்.
இது எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டிய நீண்டகாலக் கட்டமைப்புப் பிரச்சினை எனக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காக குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்டகாலத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் குறுகிய காலத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாநகர முதல்வர், மக்களின் துயரங்களையும் வேதனைகளையும் தாமும் பகிர்ந்துகொள்வதாகவும், மக்களின் பிரச்சினைகளுக்குப் பொறுப்புடன் பதிலளிக்கக்கூடிய நிறுவனமாக மாநகரசபை செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
