அரச வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்காக முறையற்ற வகையில் பயன்படுத்திய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி பகிரங்க மன்னிப்புக் கோரி விளம்பரம் வெளியிட்டுள்ளார்.
சிங்கள மொழி அரச நாளிதழ் ஒன்றில் சனிக்கிழமை (24) இந்த மன்னிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, சுமார் 6.6 மில்லியன் ரூபாயை அரசின் ஒருங்கிணைந்த நிதியத்துக்குச் செலுத்துமாறும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி நாளிதழ்களில் பகிரங்க மன்னிப்புக் கோரி விளம்பரங்களை வெளியிடுமாறும் ஃபவ்ஸிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
இலங்கையின் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனத்தைத் தனது சொந்த நலனுக்காகப் பயன்படுத்தியதன் மூலம், அரசியலமைப்பின் 12(1) பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை அவர் மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது.
இந்தச் செயலைப் பொது நம்பிக்கைக்குச் செய்யப்பட்ட “முழுமையான துரோகம்” எனவும் நீதிமன்றம் வர்ணித்திருந்தது.
தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதிகளான ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபயசேகர ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வே இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான சந்திர ஜெயரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், ‘சிலுமின’ (Silumina), ‘சண்டே அப்சர்வர்’ (Sunday Observer) மற்றும் ‘தினகரன்’ (Thinakaran) ஆகிய அரச நாளிதழ்களில், குறித்த வாகனத்தின் புகைப்படத்துடன் அரைப் பக்க அளவிலான மன்னிப்பு விளம்பரங்களை வெளியிடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மன்னிப்பு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஏனைய மொழி நாளிதழ்களிலும் விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டியுள்ளன.
