சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சர்வதேச பொலிஸார் (INTERPOL) ஊடாக அவருக்கு எதிராகச் சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவுக்கு நீதவான் பணிப்புரை விடுத்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்த விடயங்களைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7.8 மில்லியன் ரூபாய் நிதியை, பணியகத்தின் அபிவிருத்திப் பணிகளுக்குப் பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக 12,000 டி-ஷர்ட்டுகளைப் பெற்றுக்கொள்வதற்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அரசாங்கத்திற்கு நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் தொடர்பிலேயே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.
இந்த விசாரணையின் அடிப்படையில், பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
