கொழும்பில் நடைபேரணியில் ஈடுபட்டு ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த தேரர்களுக்கும், ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரைப் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், தேரர்களின் மத உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் கோரி இந்த நடைபேரணி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த நடைபேரணி இன்று மாலை ஜனாதிபதி செயலக வளாகத்தை வந்தடைந்தது.
பேரணியை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அதிகளவான பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தேரர்களின் நடைபேரணி காரணமாக காலி முகத்திடல் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலாளருடன் கலந்துரையாடலை முன்னெடுக்கக் கோரி, நடைபேரணியில் பங்கேற்ற தேரர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சற்றுமுன்னர் தேரர்கள் கூடியிருந்த பகுதிக்குச் சென்ற ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க, அவர்களுடன் கலந்துரையாடி வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
