இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தித் (Roof Top Solar) துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து சுட்டிக்காட்டி, இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது.
‘இலங்கையின் கூரை மீது சூரிய மின் உற்பத்தித் துறைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்’ எனும் தலைப்பில் அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தின் மூலம், தேசிய மின்சக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார மீட்சியை ஆபத்திற்குள்ளாக்கும் இரு முக்கிய கொள்கை ரீதியான பிரச்சினைகள் குறித்து உடனடியாக தலையிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் தேசிய அமைப்புகள் இயக்கி (NSO) ஆகியவற்றால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உள்ளடங்கலாக, உத்தியோகபூர்வ கணிப்புகளின்படி 2027 ஆம் ஆண்டின் முற்பகுதியில் 450 MWh வரை மின் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூரை மீது சூரிய மின் உற்பத்தி கட்டமைப்புக்கள் மற்றும் மின்கல சேமிப்பு அமைப்புகளை (RTSPV) விரைவாக விரிவாக்கம் செய்வதே இந்த நெருக்கடியைக் குறைப்பதற்கான மிகவும் நடைமுறைச் சாத்தியமான தீர்வாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், அண்மையில் வெளியிடப்பட்ட கொள்கை வழிகாட்டல்கள், தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு ஆதரவளிக்கக்கூடிய இத்துறையின் இருப்பிற்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கூரை மீது சூரிய மின் உற்பத்தி மற்றும் மின்கல சேமிப்புத் துறையானது தேசிய மின்சாரக் கட்டமைப்புக்கு 2,600 மெகாவாட் கொள்ளளவை பங்களிப்பதுடன், இறக்குமதி செய்யப்படும் புதைபடிவ எரிபொருட்களுக்காக செலவிடப்படும் தொகையில் மாதமொன்றுக்கு தோராயமாக 20.4 பில்லியன் ரூபாயை சேமிக்க உதவுகிறது.
அவ்வாறு இருந்தபோதிலும், இத்துறை தற்போது பல ஒழுங்குமுறை தடைகளை எதிர்கொண்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
