HomeTop newsவெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ. 10 மில்லியன் வீட்டுக் கடன்

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ. 10 மில்லியன் வீட்டுக் கடன்

வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் இலங்கை வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான மரண இழப்பீட்டுத் தொகையை 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த அதிகரிப்பு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணமாக அமையும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழந்த 50 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 7 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வெளிநாட்டில் பணிபுரியும் போது உயிரிழக்கும் தொழிலாளி ஒருவருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் 6 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டு வந்தது.

இந்தத் தொகை போதுமானதாக இல்லாத நிலையில், அதனை 20 இலட்சம் ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கையர்களில் சுமார் 250 பேர் பல்வேறு துரதிர்ஷ்டவசமான காரணங்களால் உயிரிழப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையைத் தணிப்பதற்கும், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான குழுத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் புதிய வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் சுமார் 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பி வைப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்கனவே பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், மேலும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வங்கிகள் ஊடாக 10 மில்லியன் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களை குறைந்த வட்டி விகிதத்தில் பெற்றுக்கொடுக்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளதாகவும், அதற்கான வட்டியின் ஒரு பகுதியை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் வருடாந்த கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களையும் பணியகம் தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாக அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular