இலங்கையின் முன்னணி வங்கிகள் சிலவற்றின் முக்கிய அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெருமளவிலான போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபர்களின் பணப்பரிவர்த்தனைகளை வங்கிகளின் ஊடாக மேற்கொள்ள வசதிகளை வழங்கியதாகக் கூறப்படும் வங்கி அதிகாரிகள் தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த நிலையில் சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாகக் கூறப்படும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளில், குறித்த சந்தேகநபர்கள் சில வங்கிகளின் ஊடாக கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளமை தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொதுவாக வங்கிக் கணக்குகள் ஊடாக அதிகளவிலான பணம் பரிமாற்றம் செய்யப்படும் போது, அதன் நோக்கம் மற்றும் பணத்தின் மூலாதாரம் தொடர்பான தகவல்கள் கோரப்படுவது வழக்கமாகும். எனினும், குறித்த போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்களின் பாரியளவிலான பணப்பரிவர்த்தனைகளுக்கு சில வங்கி அதிகாரிகள் தேவையான வசதிகளை வழங்கியிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், விசாரணைகளில் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், சில வங்கிகளின் முக்கிய அதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் கைது செய்யப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இதற்கு முன்னரும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தனியார் வங்கிகள் சிலவற்றில் CID அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து, அதிகாரிகள் மற்றும் முகாமையாளர்கள் சிலரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விசாரணைகள் தீவிரமடைந்துள்ளதால், தங்களது வங்கிகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் எவரேனும் அடுத்ததாக கைது செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு வங்கி துறையினரிடையே ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
